Nation News

‘அவர்கள்’ மீண்டும் மஇகாவில் இணைவர்! – டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்

காப்பார்: ஏதோ சில காரணங்களுக்காக மஇகாவிலிருந்து பிரிந்து சென்றவர்கள், தற்போது இந்திய சமுதாயத்தின் நலன் கருதி மீண்டும் கட்சியில் இணைந்து வருகின்றனர். அவ்வரிசையில், இன்னும் சிலர் கட்சியோடு கைக்கோர்க்கும் சூழல் கூடிய விரைவில் ஏற்படும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் கோடிகாட்டினார்.

மஇகா தலைவர்கள் தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து செயல்படுவார்களேயானால், அது மஇகா மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் சீர்குலைக்கச் செய்திடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ஆதலால், மஇகா தலைவர்களிடையே முதலில் புரிந்துணர்வும் ஒற்றுமையுணர்வும் மேலோங்கிட வேண்டும். அப்போதுதான் மஇகாவுக்கான பொதுமக்களின் ஆதரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

கட்சியின் செல்வாக்கை மீண்டும் உயர்த்த வேண்டும் என்பதற்காக கடந்த ஈராண்டுகளாக அனைவரையும் கட்சியினுள் ஒன்றிணைக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியிருக்கிறேன் என்றார் அவர்.

சிலாங்கூர், காப்பார், மெத்தடிஸ் தமிழ்ப்பள்ளியில் மஇகா காப்பார் தொகுதி ஏற்பாடு செய்திருந்த தீபாவளி பொது உபசரிப்பில் கலந்து கொண்ட அமைச்சர் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் காப்பார் மஇகா தொகுதி தலைவர் கோபாலகிருஷ்ணன், மஇகா மத்திய, மாநில செயலவை உறுப்பினர்களோடு, மஇகா கிளைத் தலைவர்களோடு பொது மக்களும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.