Nation News

அரசியல்வாதிகளுக்கு சுயநலம் கூடாது! – டாக்டர் சுப்பிரமணியம் அறைகூவல்

கோலாலம்பூர்: அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் முதலில் தங்களது சுயநலத்தை கைவிட வேண்டும். அப்போதுதான் அவர்களால் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

நேற்று மஇகா தலைமையக நேதாஜி மண்டபத்தில் மஇகா ஏற்பாட்டிலான கிறிஸ்துமஸ் தின பொது உபசரிப்பில் கலந்து கொண்டபோது சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனவே மஇகா தலைவர்கள் சுயநலத்தை கைவிட்டு சமூக மேம்பாட்டுக்காக பாடுபட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே அனைவரும் உயர்வுக் காண முடியும் என டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்பாக, மஇகா இன்று – நேற்று உருவான ஓர் அரசியல் கட்சியல்ல. இக்கட்சியின் தோற்றத்திற்கு பலர் உழைத்திருக்கின்றனர்; பாடுபட்டிருக்கின்றனர். மஇகா இந்தியர்களுக்காக உருவான ஓர் அரசியல் கட்சி. மஇகாவின் முதல் தேசியத் தலைவர் ஜோன் தீவியாவார். இவர் ஒரு கிருஸ்துவர் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் பேசுகையில், இக்கட்சியில் இன்றும் அனைத்து இனத்தவரும் உறுப்பினர்களாக இருப்பதால் தாம் மஇகாவின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் அனைத்து இனப் பண்டிகைகளுக்கும் மஇகா தலைமையகத்தில் பொது உபசரிப்புகள் நடத்தும்படி தாம் பணித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ சக்திவேல், மஇகா மகளிர் தலைவி டத்தோ மோகனா, மஇகா தகவல் பிரிவுப் பொறுப்பாளர் டத்தோ வி.எஸ். மோகன், மஇகா தலைவர்கள் உட்பட ஆதரவற்ற இல்லங்களிலிருந்தும் பலர் கலந்து சிறப்பித்தனர்.