Education Nation News Top News

தமிழ்ப்பள்ளிகள் நிர்மாணிப்பு தொடர்பான செய்திகளில் அவதூறு! – அமைச்சர் சுப்பிரமணியம் கண்டனம்

செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியம் பேசுகிறார். உடன் துணையமைச்சர் கமலநாதனும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும்..

மஇகாவின் அதீத முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ்ப்பள்ளிகளின் நிர்மாணிப்புப் பணிகள் குறித்து அவதூறான செய்திகளை எழுதி வருகின்ற தரப்பினரை கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சாடினார்.

தமிழ்ப்பள்ளிகளை மறுசீரமைக்கும் பணிகளில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றிற்கு தீர்வு கண்டு, நிர்மாணிப்புப் பணிகளை பூர்த்தி செய்வதில் ஏற்படுகின்ற காலதாமதம் குறித்து, சில தமிழ்ப்பத்திரிகைகள் அவதூறான செய்திகளை எழுதி வருகின்றன. உண்மை நிலையை அறிந்து எழுதினால், சமூகத்தில் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளை தவிர்க்க முடியும் என்று சுகாதாரத் துறை அமைச்சருமான அவர் அறிவுறுத்தினார்.

ரும்பியா தமிழ்ப்பள்ளியின் கட்டட ஒப்படைப்பு நிகழ்வில்..

மலாக்கா, அலோர் காஜாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தேசிய வகை ரும்பியா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் அதிகாரப்பூர்வ கட்டட ஒப்படைப்பு நிகழ்வுக்கு தலைமையேற்க இன்று காலையில் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்ட அமைச்சர், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

அரசாங்கம் வழங்கிய வெ.6.3 மில்லியன் உதவி நிதியின் வழி மிக பிரம்மாண்டமாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள இத்தமிழ்ப்பள்ளியில் கிட்டத்தட்ட 120 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவ்வாண்டுக்கான ஒன்றாம் வகுப்பில் 18 மாணவர்கள் நுழைந்துள்ளனர்.

மாணவர்களுடன்…

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டாலும் பொது சாலையிலிருந்து கல்வி வளாகத்திற்கான சாலை நிர்மாணிப்பில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. எனினும், கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் உள்ளூர் தலைவர்களின் கூட்டு முயற்சியால் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு காணப்பட்டன என்று  அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடைய, கட்டிட நிர்மாணிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும்  நன்றி தெரிவித்துக் கொண்ட அமைச்சர், ஆரம்ப காலத்திலிருந்தே இக்கட்டிட நிர்மாணிப்பை குற்றப்பார்வையோடு விமர்சித்த தரப்பினருக்கும் அவர் நன்றி கூறினார்.

(இது தொடர்பாக கல்வி துணையமைச்சர் டத்தோ கமலநாதன் பேசியிருக்கும் காணொளியை அவரின் டிவிட்டர் – பேஸ்புக் வலைத்தளங்களில் காணாலாம்)

ஏனெனில், அவர்களின் விமர்சனமே இன்று இப்பள்ளியின் நிர்மாணிப்புக்கு உந்து சக்தியாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினர். வீண் விமர்சணங்கள் செய்வோர் வாய் பேச்சில் மட்டுமே வீரர்கள், அவர்கள் செயலில் ஈடுபடுவதில்லை. ஆனால், இக்கட்டிடம் இன்று முழுமைப் பெற்றுத் திறப்பதற்கு கடமையுணர்ச்சி மிக்க தலைவர்களே காரணம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், அடுத்து வரும் காலகட்டத்தில் பள்ளி நிர்மாணிப்பு திட்டத்தில் இதர அத்தியாவசிய தேவைகளான மின்சாரம், நீர், குறிப்பாக சாலை நிர்மாணிப்பும் சேர்க்கப்பட்ட வேண்டும் என கல்வி அமைச்சுக்கு அவர் பரிந்துரை செய்தார்.ரும்பியா தமிழ்ப்பள்ளியின் நிர்மாணிப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கியவர்கள்..

இந்நிகழ்வில், கல்வித் துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன், கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளிகளின் வாரிய உறுப்பினர்கள், மஇகா தலைவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.