community news Nation News Top News

குற்றம் புரியா வசந்த பிரியா துர் மரணம்!

ஜோர்ஜ் டவுன்: ஆசிரியையின் ஐ-போனை களவாடியதாக சொல்லப்பட்ட 13 வயது வசந்த பிரியா, ஒரு பாவமும் அறியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இன்று அதிகாலை 3.30 மணிக்கு செபெராங் ஜெயா மருத்துவமனையில் துர் மரணம் அடைந்தார்.

இதனை உறுதிப்படுத்திய மலேசியத் தமிழர் குரல் தலைவர் டேவிட் மார்ஷல், வசந்த பிரியாவின் இரத்த அளுத்தம் நேற்றிரவு அதிவேகமாக இறங்கியது என்றார்.

“நேற்றிரவு 7.30 மணிக்கு அவளின் இரத்த அளுத்த இறங்கியது. சிறிது நேரம் கழித்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. எனினும், அதிகாலை 3.30 மணிக்கு, அவளின் இரத்த அளுத்தம் மீண்டும் அதிவேகமாக இறங்கியது; இறுதி மூச்சும் நின்றது” என அவர் சொன்னார்.

கடந்த ஜனவரி 17ஆம் தேதி, நிபோங் தெபால் மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியரை ஒருவர், தனது ‘ஐ-போன் 6’ கைப்பேசியை ஒரு மாணவி திருடிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

தற்கொலை செய்து கொள்ளும் முன் வசந்த பிரியா தன் கைப்பட எழுதிய வாக்குமூலம்..

அந்த மாணவி வசந்த பிரியாதான் என்று கூறிய அவர், அம்மாணவிக்கு ஓய்வு கூட தராமல் சுமார் 5 மணி நேரம் தனது அலுவலக அறையில் குந்தியிருக்கச் செய்துள்ளார். மேலும், உண்மையைச் சொல்லாவிடில் போலிஸ் புகார் செய்யவிருப்பதாகவும் அம்மாணவியை மிரட்டியிருக்கிறார்.

அதோடு நின்றுவிடாது, அம்மாணவியை தனது கணவருடன் காரில் ஏற்றிக் கொண்டு அவளின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு, அவளின் பெற்றோர் முன்னிலையில் கடுமையாகத் திட்டியிருக்கிறார்.

இதனால், மனமுடைந்த வசந்த பிரியா, “சத்தியமாக அந்த ஐ-போனை நான் திருடவில்லை டீச்சர்” என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, அன்றைய தினமே தூக்கிலிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.