Nation News Top News

ஆருடம் உண்மையானது! நாடாளுமன்றம் சனிக்கிழமை கலைக்கப்படுகிறது

புத்ராஜெயா : நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில்,  நாளை 7.4.2018 சனிக்கிழமையன்று நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சற்று முன் அறிவித்தார்.

புத்ராஜெயாவிலுள்ள தமது பிரதமர் அலுவலகத்திலிருந்து இன்று 6.4.2018 வெள்ளிக்கிழமை சரியாக நண்பகல் 12.00 மணிக்கு, ஆர்.டி.எம். டிவி 1இன் வழி நேரலை ஒளிபரப்பில் டத்தோஸ்ரீ நஜிப் தோன்றினார்.

இன்று காலையில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் முகம்மட் அவர்களைச் சந்தித்து,  13ஆவது நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவு பெற்று வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படும் போது, மாநில சட்டமன்றமும் ஒருசேர கலைக்கப்பட்டால் சுமுகமான பொதுத்தேர்தலுக்கு  வழி அமையும் என்றார் அவர்.

தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப், தமது தலைமையிலான அரசாங்கம் மக்கள் நலனை முன்னிறுத்தி ஆற்றிய சேவைகள் குறித்து 20 நிமிடங்களுக்குப் பேசினார்.

புத்ராஜெயாவை தே.மு.அரசாங்கமே தொடர்ந்து ஆட்சி புரிவதற்கான அவசியத்தையும் அதன் பலாபலன்களையும் அவர் தமது சிறப்பு உரையில் கோடிக்காட்டினார்.

பிரதமரின் இந்த சிறப்பு நேரலைப் பதிவு 25 நிமிடங்களுக்கு நீடித்தது. பொதுத்தேர்தல் தொடர்பான இதர விவரங்கள் நாளை முதல் அறிவிகப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.