Education Nation News Top News

மெட்ரிகுலேஷனுக்கு ‘கோட்டா’ முறையிலான 2,200 இட ஒதுக்கீடு: நஜிப் தலைமையில் பொற்காலம் மலர்கிறது!  -பிரகாஷ்ராவ்

கோப்புப் படம்

சுபாங்: இந்திய மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளை நிரந்தரமாக நிலை நிறுத்தும் முயற்சியாக, ‘கோட்டா’ முறையை அமல்படுத்தி, இந்திய சமூகத்தின் மேன்மைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தொடர்ந்து அடித்தளம் அமைத்திருக்கிறார் என்று கல்வியாளர் அ.பிரகாஷ்ராவ் தனது மன நிறைவை வெளிப்படுத்தினார்.

கடந்த சனிக்கிழமையன்று, வறிய நிலையிலான இந்தியர்களுக்கு அமானா சஹாம் சத்து மலேசியா முதலீட்டுத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த தேசிய முன்னணி (தே.மு) தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப், மெட்ரிகுலேஷன் கல்விக் கழகங்களில் இந்திய மாணவர்களுக்காக மேலும் 700 இடங்களை அரசாங்கம் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.

ஏற்கெனவே 1,500 இட வாய்ப்புகளை வழங்கியுள்ள அவர், கூடுதலாக 700 இடங்களை அதில் சேர்த்திருப்பதன் வழி, இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு 2,200 ஆக உயர்ந்திருக்கிறது.

இது முற்றிலும் ‘கோட்டா’ முறையில் நிரந்தரமாக்கப்பட்டுள்ளதால், “மனு செய்தேன்; நிராகரிக்கப்பட்டது” என்கிற கடந்த கால கசப்பான சம்பவங்கள் இனியும் நிகழாது என சுங்கை பூலோ நாடாளுமன்ற தே.மு.வின் இந்தியர் நல இயக்குநருமான பிரகாஷ்ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.

ஞாயிறன்று, புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற அதன் 41ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து, பிரகாஷ்ராவ் உரையாற்றினார்.

‘மெரிட்டோகிராசி’ எனும் முறைமையால் நம் இந்திய மாணவர்களில் பலரும் பொதுப்பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்பு பெற முடியாமல் தத்தளித்தனர். அச்சூழலால் இந்திய மாணவர்கள் சந்தித்த பின்னடைவுகளை உணர்ந்து கொண்டுள்ள பிரதமர், மீண்டும் ‘கோட்டா’ முறையை நம் மாணவர்களுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கியுள்ளார்.

இதன்வழி, பொதுப்பல்கலைக்கழங்களில் நுழைகின்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் நமக்குச் சாதகமாக அமைந்துள்ளது. கல்வி நலன் மீது அதீத கவனம் செலுத்துகின்ற மஇகாவும், பொதுப்பல்கலைக்கழங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை 7 விழுக்காடு உயர்த்த இலக்கு கொண்டுள்ளது. அதனை பூர்த்திச் செய்யும் வகையில் பிரதமரின் இந்த அறிவிப்பும் அமைந்துள்ளது என்று யூனிக் கழகத் தலைவருமான பிரகாஷ்ராவ் குறிப்பிட்டார்.

இதனிடையே, பிரதமரின் நேரடிப் பார்வையால் தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியமும் பெரிய அளவில் வழங்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அவர், கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளிக்கு வெ.2 லட்சது 50 ஆயிரம் நிதியை, செளந்தரராசன் தலைமையிலான மஇகா சுபாங் தொகுதி பெற்றுத் தந்துள்ளதை நினைவு கூர்ந்தார்.

சுபாங் – சுங்கை பூலோ பகுதிகளிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மீது, எப்போதும் தனிக்கவனம் செலுத்தி வருகின்ற பிரகாஷ்ராவ், அண்மையில் புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளிக்கு 50 நாற்காலிகளையும் 50 மேசைகளையும் மாணவர்களுக்காக வழங்கி, அப்பள்ளியின் மேன்மைக்கு தான் என்றுமே துணை இருப்பதை நிரூபித்தார்.

இத்தொகுதி வாழ் இந்திய மாணவர்களின் தேவையை பூர்த்திச் செய்து கொடுப்பதில், தான் அக்கறை செலுத்தி வருவதாகவும் அரசாங்கம் வழங்குகின்ற வாய்ப்புகளை அவர்களுக்கு பெற்றுத் தருவதிலும் முழுமூச்சாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட பிரகாஷ்ராவ், தனது முயற்சிக்கு பெற்றோர்களும் தக்க தருணத்தில் ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.