GE 14 Nation News Top News

டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன்: 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட மக்கள் சக்தி கட்சி விருப்பம்!

கோலாலம்பூர்: தேசிய முன்னணியுடன் (தே.மு) மக்கள் சக்தி கட்சி கொண்டுள்ள 10 ஆண்டுகால பங்காளித்துவத்தின் அடிப்படையில், எதிர்வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் குறிப்பிட்ட ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் விருப்பம் தெரிவித்தார்.

பாடாங் செராய் (கெடா), பத்து காவான் (பினாங்கு), சுங்கை சிப்புட் (பேரா), உலு சிலாங்கூர் (சிலாங்கூர்), எல்லை சீரமைப்புக்கு முன் தெலுக் கெமாங் தொகுதியாக இருந்த போர்ட் டிக்சன் (நெகிரி செம்பிலான்) ஆகிய இந்த ஐந்து தொகுதிகளிலும் தே.மு. சார்பாக போட்டியிட மக்கள் சக்தி கட்சி தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.

நேற்று பிரிக்பீல்ட்ஸ் விஸ்தா செண்ட்ரலில் உள்ள மக்கள் சக்தி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ தனேந்திரன் பேசினார்.

மே 9இல் நடைபெறுகின்ற பொதுத் தேர்தல் சாதாரணமானது அல்ல! அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்கும் களமும் அல்ல! தே.மு.வின் வெற்றியை உறுதிச் செய்யக்கூடிய வேட்பாளர்களை சல்லடை போட்டு அலசி ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சியிடம் தோல்வி கண்ட வேட்பாளர்களையே மறுபடியும் நிறுத்தி அழகுப் பார்ப்பது என்னவோ, நெருப்பாற்றில் நீந்துவதற்குச் சமம்!

நடப்புச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வாகை சூடும் கடாட்சம் கொண்ட வேட்பாளர்களை நிறுத்தினால்தான், தே.மு.வின் வெற்றி அமோகமாக அமையும். வெற்றி வேட்பாளர்கள் இல்லையேல், அந்த வாய்ப்புகளை இதர பங்காளி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என டத்தோஸ்ரீ தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.

மக்கள் சக்தி கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என தாம் கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்விவகாரத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் பார்வைக்கு விட்டு விடுகிறேன் என்றார்.

இதற்கிடையில், 1 லட்சத்து 65ஆயிரம் உறுப்பினர்களை கொண்டிருக்கும் மக்கள் சக்தி கட்சியின் உதவியையோ – ஆதரவையோ இதுவரையிலும் மஇகா நாடவில்லை என்றும் இது சம்பந்தமாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தம்மிடம் பேசவில்லை என்றும் டத்தோஸ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலுக்கு மக்கள் சக்தி கட்சியின் உதவி அவர்களுக்குத் தேவை இல்லை என்று முடிவு செய்துவிட்டார்கள் போலும் என்று வருந்திய அவர், எதுவாகினும் தே.மு.வுக்கான மக்கள் சக்தி கட்சியின் ஆதரவு தொடர்ந்து வலுப்பெற்றிருக்கும் என்றார்.