community news Nation News Top News

எதிர்க்கட்சியான எங்களுக்கு இனிமேல் வழக்கறிஞர் வேலைதான்! – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், ஜுலை 26-

மஇகா தலைவர்களை குறி வைத்து அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை பாயும் என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மீண்டும் உறுதிப்படக் கூறினார்.

“அரசாட்சியில் இல்லாவிடினும் இந்திய மக்களின் உரிமைக்காகவும் மேன்மைக்காகவும் தொடர்ந்து உழைக்கக்கூடிய உணர்வையும் பலத்தையும் நாங்கள் கொண்டுள்ளோம். அதற்கு இடையூறாக, மக்கள் மத்தியில் மஇகாவுக்கு வேண்டுமென்றே களங்கத்தை ஏற்படுத்தும் கும்பல் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

நேற்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயலவை  கூட்டத்திற்கு தலைமையேற்றப் பிறகு, டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

“எங்களிடம் 21 வழக்கறிஞர்கள் இருக்கின்றார்கள். இப்பதான் நாங்கள் எதிர்க்கட்சியாகிவிட்டோமே! இனிமேல் வழக்கறிஞர் வேலையை பார்க்க வேண்டியதுதான்!

“முன்பிருந்த எதிர்கட்சி இந்தியத் தலைவர்கள், எதற்கெடுத்தாலும் தங்களின் வழக்கறிஞர் தொழிலை முன்னிறுத்தி அரசியல் ஆட்டம் காட்டுவார்கள். அந்த வழக்குகளில் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ! மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக எதையாவது செய்வார்கள்.ஒருவேளை வழக்கில் தோற்றுவிட்டால், அரசாங்கம் எங்களிடம் இல்லை என்பார்கள்!

“இப்போது, நாங்களும் எங்கள் மீது வீண்பழி சுமத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்” என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.