India Nation News Top News

தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய பேரிழப்பு..!

சென்னை, ஆக.8-

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதியின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்ததாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி, கருணாநிதி மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கலைஞர் கருணாநிதியின் வெற்றிடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்காக போராடிய மாபெரும் வீரரை இழந்திருக்கிறோம் என்றும், கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டு மறுக்க முடியாதது எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்ததாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். சமூக நீதியை காக்க தனது கடைசி மூச்சு வரை போராடியவர் கருணாநிதி என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். கலைஞரின் அத்தியாயத்தையும், சரித்திர சாதனைகளையும் என்றும் நெஞ்சில் நிறுத்தி தமிழைக் காப்போம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். தமிழக அடையாளங்களாக உள்ள கட்டுமானங்களுக்கு கருணாநிதியே காரணம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.

தலைசிறந்த தமிழறிஞராக திகழ்ந்த கருணாநிதி மறைவுச் செய்தி மிகவும் வருத்தம் தருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். அண்ணா இருந்தபோது கழகம் காத்திட வளர்ந்த இரு தம்பிகள் கருணாநிதியும், எம்ஜிஆரும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.