Political Top News

நிலம் உண்டு! தமிழ் இடைநிலைப் பள்ளியை கட்டுவதற்கு அரசாங்கம் தயாரா? செனட்டர் டத்தோ டி.மோகன் கேள்வி

 

கோலாலம்பூர் ,ஜூலை 22-
ஆட்சியை கைப்பற்றியதும் தமிழ் இடைநிலைப் பள்ளியை கட்டுவதாக நம்பிக்கை கூட்டணி அளிதிருந்த வாக்குறுதி இன்று காற்றில் பறந்ததாக செனட்டர் டத்தோ டி.மோகன் சாடினார்.
தேர்தல் சமயத்தில் பல்வேறு இனிப்பான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களின் நம்பிக்கையை  பெற்று ஆட்சி அமைத்ததும் கொடுத்த வாக்குறுதிகள் மறக்கப்பட்டு விட்டது.
தமிழ் இடைநிலைப் பள்ளியை கட்டுவது குறித்து நம்பிக்கை கூட்டணி கொடுத்த வாக்குறுதி பற்றிய கேள்வியை தாம்  நாடாளுமன்ற மேலைவையில் முன்வைத்ததாக நேற்று  அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.
இந்நாட்டில் தமிழ் இடைநிலைப் பள்ளி கட்டுவதன் தேவைகள் என்னவென்பதை ஆராய சிறப்பு குழு ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது என்று துணைக் கல்வி அமைச்சர் தியோ நி சிங் பதிலளித்தார் .
வாக்குறுதி அளித்த பின் ஆய்வு நடத்துவது முறையல்ல. இதை வாக்குறுதி அளிக்காத முன்பே யோசித்திருக்க வேண்டும். அதோடு இந்நாட்டில் தமிழ் இடைநிலைப் பள்ளியை கட்டுவது மிக முக்கியமான தேவையாகும்.
முன்பு பினாங்கு மாநிலத்தின்  முதல்வராக இருந்த லிம் குவான் எங் அம்மாநிலத்தில் பாகான் டாலாமில் தமிழ் இடைநிலைப் பள்ளியை கட்டுவதற்கு முன்னெடுத்த திட்டங்களுக்கு மத்திய அரசு (புத்ராஜெயா) அனுமதி வழங்க வில்லை என்று கூறியிருந்தார். அத்தகவல் ஜசெகாவின் அதிகாரப்பூர்வ  இணை ஏட்டில் வெளிவந்திருந்தது.
ஆனால் தற்போது மாநில  அரசாங்கத்தையும்  மத்திய அரசாங்கத்தையும்  நம்பிக்கை கூட்டணியே ஆட்சி புரிந்து வரும் வேளையில் ஏன் இன்னும் பள்ளி கட்டப்படாமல் உள்ளது என்று டி.மோகன் கேள்வி எழுப்பினார்.
பாகான் டாலாமில் முன்மொழியப்பட்ட நிலம் தற்போது இல்லையென்றால்  தேமு ஆட்சியில் கல்வி அமைச்சுடன் இணைந்து பூச்சோங் பத்து 14 பகுதியில் தமிழ்ப்பள்ளியும் தமிழ் இடைநிலைப் பள்ளியும் கட்டுவதற்கு தாம் ஓர் நிலத்தை அடையாளம் கண்டு வைத்திருப்பதாக கூறிய அவர் அந்நிலத்தில் பள்ளியை கட்டுவதற்கு அரசாங்கம் தயாரா என்று கேள்வியும் எழுப்பினார்.
இந்திய சமுதாயத்திற்காக தமிழ் இடைநிலைப் பள்ளியை கட்டவது நம்பிக்கை கூட்டணியின் கடமையாகும் என்று கூறியது வெறும் தேர்தல் வாக்குறுதியாக தான் மக்கள் நினைக்கிறார்கள்.
எனவே கொடுத்த வாக்கை நம்பிக்கை கூட்டணி காப்பாற்ற வேண்டும் என்று டத்தோ டி.மோகன் கேட்டு கொண்டார்.