community news Top News

பத்துமலை திருத்தலத்தின் மேம்பாட்டு பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது யார்?

 

பத்துகேவ்ஸ், ஜூலை 29-
பத்துமலை திருத்தலத்தில்  இந்திய சமுதாயத்தின் நலனுக்காக மேற்கொள்ளப்படவிருக்கும் மேம்பாட்டு பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது யார்?
ஒன்றும் செய்ய வில்லை என்றால் குறை கூற மட்டும் ஆயிரம் பேர் கிளம்புகின்றனர். ஆனால் சமுதாய உணர்வோடு முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஆதரவு இல்லையெனில் என்ன தான் செய்வது என்று தலை சுற்றி நிற்கிறது ஆலய நிர்வாகம்.
இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் பத்துமலை திருத்தலத்தை உலக நாடுகள் வியப்புடன் பார்க்கின்றன. ஆனால் உள்நாட்டிலே முறையான அங்கீகாரம் இல்லாத நிலை தான் இங்கு ஏற்பட்டுள்ளது.
ஆயிரங்கணக்கில் சுற்றுப்பயணிகள் வந்து போகும் இடம் என்பதால் கேபில் கார் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் முறையான காரணம் இன்றி செலாயாங் நகராண்மைக் கழகம் அத்திட்டத்தை ரத்து செய்தது.
தற்போது சகல வசதிகளுடன் கலாச்சார மையத்தை இங்கு கட்டுவதற்கு  வரைப்படம் உட்பட அனைத்து அடிப்படை வேலைகளையும் நிர்வாகம் செய்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பியும் விட்டது ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
சிலாங்கூர் மாநில  மந்திரி பெசாரும் சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான அமிருடின் ஷாரியிடம் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் அவரிடமிருந்தும் பதில் இல்லை.
அங்கீகாரம் இல்லாமல் பல வேலைகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செலாயாங் நகராணைக் கழகம் அதை கவனிப்பதில்லை. நியாயமாக செயல்படுத்தவிருக்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் இருப்பது  முறையான செயல் அல்ல.
இந்த கலாச்சார மையத்தில் 3,000 பேர் அமரக் கூடிய மண்டபம், வர்த்தக தளங்கள், ரத்த சுத்திகரிப்பு மையம் என பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. சமுதாயத்திற்கு பயனளிக்கும் இத்திட்டங்களுக்கு உண்மையில் முட்டுக் கட்டையாக இருப்பது யார்? என்ற கேள்வி பரவலாக எழுந்து வருகிறது.