Top News

வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எப்போது? தேவையா ஜாவி இப்போது?

கோலாலம்பூர், ஆக. 9-
பொது தேர்தல் சமயத்தில் நம்பிக்கை கூட்டணி வாரி இறைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தேவை இல்லாத விஷயங்களை மக்கள் மத்தியில் திணிப்பதற்கான காரணம் என்ன?
குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கு கொடுக்கப்பட்ட பல வாக்குறுதிகள் இன்னும் செயல்படுத்தப்படாமல் இருக்கும் வேளையில் கல்வி திட்டத்தில் ஜாவி எழுத்தை திணிப்பதற்கான காரணம் என்ன?
உலக நாயகன் கமல்ஹாசன் சொல்வதை போல மக்களிடையே பரவி மறதி நோயை நம்பிக்கை கூட்டணி சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறதா? ஒரு விஷயம் பூதாகரமாக வெடிக்கும் வேளையில் மற்றொரு விஷயத்தை கொண்டு வந்த பழையதை மறக்கடிக்கும் கிள்ளாடித் தனத்தை நம்பிக்கை கூட்டணி கையாளுகிறதா?
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள ஜாவி ஓவிய எழுத்துக்கள் விவகாரம் எதை மறக்கடிப்பதற்காக கொண்டு வரப்பட்டது? மெட்ரிகுலேஷன் பிரச்சினைக்கா? அஸ்மின் பிரச்சினைக்கா? இந்திராகாந்தி  பிரச்சினைக்கா?  அல்லது ஸாக்கித் நாயக் பிரச்சினைக்கா?  பல கேள்விகள் மக்கள் மத்தியில் தொடர்ந்து  எழுகின்றன.
குடியுரிமை, சொத்துடமை முன்னேற்றம், மலிவு விலை வீடுகள், கல்வி வாய்ப்புகள், பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இப்படி பல வாக்குறுதிகள் இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டன.
ஆனால் அவற்றில் எதையும் முறையாக செய்து முடிக்காத அரசாங்கம் தேவையற்ற விஷயங்களை செய்வது மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமுதாயத்தின் தேவைகள் ஏராளமாக இருப்பதை உணர்ந்த இந்திய அமைச்சர்கள் ஏன் இதுவரை வாயைத் திறக்காமல் உள்ளனர்? ஜாவி மொழி அறிமுகம் தொடர்பில் அமைச்சர்கள் யாரும் பேசாததது ஏமாற்றத்தை அளிக்கின்றது.
தமிழ்ப்பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் தேசியப் மொழி பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை  அதிகமாக உள்ளது எத்தனை பேருக்கு தெரியும்?
தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி தேர்வு பாடமாக கொண்டு வரப்பட்டாலும் தேசியப் பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் நிலை என்ன?
நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மலாய் மொழி பாட போதனையின் போது கற்றுக் கொடுக்கப்படும் ஜாவி ஓவிய எழுத்துகளை மற்ற மாணவர்கள் படிக்கும் போது இந்திய மாணவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் அம்மொழியை கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை  அங்கு ஏற்படும்.
தங்களின் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல் தேசிய மொழி பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு இது ஒரு நல்ல பாடம்.
இந்திய மாணவர்களை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பியிருந்தால் போராடி ஜாவியை விரட்டி அடித்திருக்கலாம். ஆனால் இன்று தாய்மொழி பள்ளிகளில் அது தேர்வு பாடமாக இருந்தாலும் தேசிய பள்ளிகளில் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றன.
இன்றைய அரசியல் சூழலில் ஒரே நாளில் பல விஷயங்கள் மாறுகின்றன. சிந்தித்து செயல் பட வேண்டிய கட்டாயம் மக்களுக்கு உள்ளது. இந்திய சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.