Top News

ஸாகிர் விவகாரம்: பாஸ் நிலை அதிருப்தி அளிக்கிறது டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் சாடல்

கோலாலம்பூர், ஆக.18-
இந்துக்களுக்கு நாட்டின் மீதுள்ள விசுவாசம் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாகிர் நாயக்கின் செயலுக்கு பாஸின் நிலை அதிருப்தி அளித்துள்ளதாக நாடாளுமன்ற மேலைவத் தலைவரும் மஇகா தேசியத் தலைவருமான டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சாடினார்.
இந்துக்களை கேவலப் படுத்தி பேசியிருக்கும் ஸாகிரின் செயலை பாஸ் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் பூதாகரமாக வெடித்து வரும் இவ்விவகாரத்தில் பாஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருவது முறையல்ல.
அண்மையில் கோத்தா பாருவில் பாஸ் ஏற்பாட்டிலான மத பிரச்சார கூட்டத்தில் மலேசிய இந்துக்கள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரை காட்டிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மீதே அதிக விசுவாசமும் அன்பும் கொண்டுள்ளனர் என்று ஸாகிர் பேசியிருக்கிறார்.
அவரின் இந்த ஆணவத் தனமான பேச்சுக்கு பாஸ் என்ன நடவடிக்கை எடுத்தது? மத சார்பில்லாமல் பாஸ் செயல்படும் என்பதால் தான் அக்கட்சியுடன் மஇகா உறவு வைத்துள்ளது.
ஆனால் இவ்விவகாரத்தில் பாஸ் எதுவும் பேசாத நிலையில் இரு காட்சிகளுக்கு இடையிலான உறவு கேள்வி குறியாகிறது.
மதம் சார்ந்த அரசியல் செயல்பாடுகளை கடந்து செல்வோம் என்று பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ ஹடி பேசியது எல்லாம் வெறும் கண் துடைப்பு தானா? இந்தியர், சீனர்கள் தேவையில்லையா என்பதை ஹடி வாய் திறந்து சொல்ல வேண்டும் என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கேட்டு கொண்டார்.
இந்நாட்டில்  இந்துக்களும் சீனர்களும் இஸ்லாத்தை வெகுவாக மதித்து செயல்படுகின்றனர். இஸ்லாத்தை பிற இனத்தவர்கள் இழிவுப் படுத்தினால் உடனடியாக சட்டம் பாய்கிறது. ஆனால் இந்துக்களை இழிவுப்படுத்துவோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நாட்டின் நல்லிணக்கம், சுபிட்சம் சீரழிந்து வருகிறது. இந்துக்களை கேவலப்படுத்தும் எண்ணம் பாஸூக்கு இருக்குமாயின் டத்தோஶ்ரீ ஹடி அதை வாய்த் திறந்து சொல்ல வேண்டும். இல்லையேல் பாஸூடனான உறவை முடித்துக் கொள்ளவும் மஇகா தயங்காது என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.