Top News

ஸம்ரி வினோத் மீது சட்ட நடவடிக்கை இல்லை! சட்டத்துறை அலுவலகம் தகவல் இது நியாயமா? இந்துக்கள் கேள்வி

கோலாலம்பூர், செப். 6-
இந்துக்களின் கடவுள் வழிப்பாடு குறித்து மிக மோசமாக கருத்துரைத்த ஸம்ரி வினோத் மீது சட்ட நடவடிக்கை இல்லை என்று சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அந்த நபர் மீது இனி எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்று ஆகம அணிக்கு வழங்கிய கடிதத்தின் வழி தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜூலை 5ஆம் தேதி அரசு வழக்கறிஞர்  முகமட் ஹானாஃபியா ஸாகாரியா கையெழுத்திட்ட இக்கடிதத்தின் நகல் ஆகம அணிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதோடு கடிதம் தாமதமாக கிடைத்ததற்கு மன்னிப்பும் கோரப் பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் மோற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பிறகு சட்டத்துறை தலைவர் வழங்கிய பதில் இதுதான்.  இதை தொடர்ந்து தாம் எந்த விவரத்தையும் கூற முடியாது என்று சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் தொடர்பு பிரிவு அதிகாரி கூறியுள்ளார்.
இந்துக்களின் கடவுள், வழிப்பாட்டு முறைகளை கேவலமாகப் பேசும் ஸம்ரி வினோத்தின் கருத்து காணொளியில் தெளிவாக இருந்தது. இதனால் கோபம் அடைந்த ஆயிரங்கணக்கான இந்துக்கள் ஸம்ரி மீது போலீஸ் புகார் செய்தனர். அந்த காணொளியை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? இந்த ஆதாரம் போதாதா அவர் மீது நடவடிக்கை எடுக்க என்று ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமி கேள்வி எழுப்பினார்.
இதுவே ஒரு நபர் இஸ்லாத்தைப் பற்றியோ மலாய்க்காரர்களை பற்றியோ இழிவாக பேசியிருந்தால் நடவடிக்கை வேறு விதமாக இருந்திருக்கும். அதற்கு பலர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே சாட்சியாகும்.
சட்டத்துறை அலுவலகத்தின் இந்த பதில் இந்துக்களுக்கு ஏமாற்றத்தை தந்ததுடன் அவமானம் படுத்தும் வகையிலும் இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
இப்படி என்றால் இனி யார் வேண்டுமானாலும் இந்துக்களை கேவலப்படுத்தலாம் என்பதை போல ஆகிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர வாய்ப்பிருக்கிறது என்று அவர் சொன்னார்.
ஸம்ரி வினோத் கைது செய்யப்பட்டு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆகம அணி சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பிய முதல் கடிதத்திற்கு பதில் கிடைக்காத பட்சத்தில் இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட கடிதத்திற்கு  இந்த பதில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.