Sports Top News

கால்பந்து ஜாம்பவான் டத்தோ சந்திரன் காலமானார்!

கோலாலம்பூர், செப்டம்பர் 28-

1960 & 70-களில் மலேசிய கால்பந்து அணியின் பொற்காலத்தில் கேப்டனாக பொறுப்பேற்றிருந்த டத்தோ எம். சந்திரன் உடல்நல குறைவின் காரணமாக இன்று காலை காலமானார். 77 வயதுடைய சந்திரன்,  சிலாங்கூர் அம்பாங் ஜெயாவில் தனது இல்லத்தில் காலை 7.30 மணி அளவில் காலமானதாக மலேசிய கால்பந்து சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் கிறிஸ்டபர் ராஜ் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் கால்பந்து அணியிலும், மலேசிய கால்பந்து அணியிலும் தற்காப்பு பகுதியில் மிக சிறந்த ஆட்டக்காரராக விளங்கிய சந்திரனுக்கு இன்று மாலை 5 மணி அளவில் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று மதியம் தொடங்கி நண்பர்களும் உற்றார் உறவினர்களும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தலாம்.

சந்திரன் கடுமையான நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்கு முன்பு கோலாலம்பூர் மருத்துவமனையில் சுமார் ஒரு மாதம் சிகிச்சை பெற்றார்கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1942-இல் பேராக் சுங்கை சிப்பூட்டில் பிறந்த சந்திரன், 1960-களின் முற்பகுதியில் காற்பந்தில் தீவிரமாக ஈடுபட்டார். அவர் அனைத்துலக அளவில் 163 முறை தேசிய அணியைப் பிரதிநிதித்து தற்காப்பில் அசைக்க முடியாத ஆட்டக்காரராக விளங்கினார்.