Top News

மலேசியாவில் இன ஒற்றுமை அவசியமானது ஆனால் தாய் மொழி பள்ளிகளை மூட அவசியம் இல்லை!

கோலாலம்பூர் , அக். 7-
மலேசியாவின் இன்றைய சூழலில் இன ஒற்றுமை அவசியமானது தான். ஆனால் தமிழ் – சீனப் பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் துணை கல்வி அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் அறிவுறுத்தினார்.
200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது. அதோடு தாய் மொழி பள்ளி கல்வி திட்டம் சுதந்திரத்திற்கு முன்பிலிருந்தே இருக்கின்றது.
தாய்மொழிப் பள்ளிகளில் பயின்ற ஏராளமான மாணவர்கள் விளையாட்டு உட்பட அரசியலிலும் பெயர் பதித்திருக்கின்றனர்.
தேசிய ஒற்றுமைக்கு தாய் மொழிப் பள்ளிகள் இடையூறாக இருக்கின்றன என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. தேசிய ஒற்றுமைக்கும் கல்வி திட்டத்திற்கும் தொடர்பில்லை.
தாய்மொழிப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை அறிந்து, அப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு  முன்னணியின் ஆட்சியில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்பட்டது.
தாய்மொழி கல்வியின் பாடத்திட்டத்தைப் பொருத்தவரை, பல்வேறு இனங்களின் ஒற்றுமையை கற்பிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றைப் புரிந்துகொள்வது அனைத்து மாணவர்களின் ஒற்றுமையை வளர்ப்பதற்கு கற்பிக்கப்படுகிறது. தேசிய ஒற்றுமை குறித்த ஆய்வில் எளிதான ஒரு விஷயமாக தாய்மொழிப் பள்ளிகள் தெரிகின்றன.
கடந்த 60 ஆண்டுகளில் நாட்டில் ஒற்றுமையின்மை ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இது தொடர்பான ஆய்வையே அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
சமூக பொருளாதார நிலைமைகள், வாய்ப்புகளில் சமத்துவம் மற்றும் நேர்மை, சமூக மற்றும் பொருளாதார இயக்கம் அனைத்தும் முழுமையாக ஆராயப்பட வேண்டிய அம்சங்களாகும்.
மலேசியாவில் ஒற்றுமை மிக முக்கியமானது, ஆனால் தாய் மொழிப்  பள்ளிகளை மூடுவது அவசியமில்லை என்று டத்தோ கமலநாதன் கூறினார்.