Top News

இந்தியர்கள் – சீனர்களை ஏற்க கட்டாயப்படுத்தப்பட்டதா? மகாதீரின் பேச்சுக்கு ராம் கார்பால் கண்டனம்

ஜார்ஜ்டவுன், அக். 8-
மலாயா சுதந்திரம் அடைவதற்கு இந்தியர்கள் – சீனர்களை ஏற்றுக் கொள்ள பிரிடிஷ் ஆட்சியாளர்கள் மலாய்க்காரர்களை கட்டாயப்படுத்தியதாக கூறிய பிரதமர் துன் மகாதீரின் பேச்சுக்கு ராம் கர்பால் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விருப்பம் இருக்கோ இல்லையோ அவர்களை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை. அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால் சுதந்திரம் கிடைத்திருக்காது என்று மலாய்க்காரர்கள் தன்மானம் காக்கும் மாநாட்டில் பேசிய துன் மகாதீர் கூறியிருக்கிறார்.
இந்நாட்டில் வாழும் அனைத்து இனங்களுக்கும் பிரதமரான துன் மகாதீர் இவ்வாறு பேசியது உணர்வுகளை தூண்டும் வகையில் அமைகின்றன. இது நாட்டின் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர் குழைக்கும் என்று அவர் எச்சரித்தார்.
இந்தியா – இந்தியர்களுக்கு, சீனா – சீனர்களுக்கு என்பதை போல மலேசியா மலாய்க்காரர்களுக்கு என்று அம்மாநாட்டில்  ஸைனால் கிலிங் கிலிங் என்பவர் பேசியிருக்கிறார். ஆனால் அவர் அப்படி சொன்னது தனது காதில் கேட்க வில்லை என்று துன் மகாதீர் கூறியிருந்தார்.
மூவின மக்கள் வாழும் இந்நாட்டில் இம்மாதிரியான கருத்துகளை வெளிப்படுத்திய அவரை மகாதீர் கண்டித்திருக்க வேண்டும்.
இதனிடையே ஸைனாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பினாங்கு சமூக மேம்பாடு அமைப்பு போலீஸ் புகார் செய்துள்ளது.